டெல்லியில் முடியாதது பஞ்சாப்பில் அமல்; வீடு தேடி ரேசன் பற்றி கெஜ்ரிவால் பேட்டி


டெல்லியில் முடியாதது பஞ்சாப்பில் அமல்; வீடு தேடி ரேசன் பற்றி கெஜ்ரிவால் பேட்டி
x
தினத்தந்தி 28 March 2022 2:29 PM IST (Updated: 28 March 2022 3:17 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில், முதல்-மந்திரி அறிவித்ததுபோல் விரைவில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என டெல்லி முதல்-மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.



புதுடெல்லி,


பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரசை வீழ்த்தி, ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.  அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ரேசன் பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அது, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.  கடந்த 4 ஆண்டுகளாக டெல்லியில் இந்த திட்டத்தினை அமல்படுத்த நாங்கள் போராடி வருகிறோம்.  அதற்கான ஒவ்வொரு விசயமும் திட்டமிடப்பட்டது.  ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அதனை நிறுத்தி விட்டது என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, ஒருவருடைய நேரம் வரும்போது அவருடைய எண்ணத்தினை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாது என ஒரு பழமொழி உள்ளது.  அவர்கள் டெல்லியில் அமல்படுத்த எங்களை அனுமதிக்கவில்லை.

அதனால் ஒன்றும் சிக்கலில்லை.  பஞ்சாப்பில் நாங்கள் அதனை செய்வோம்.  நாடும் இதனை கேட்டு வலியுறுத்தும்.  மொஹல்லா கிளினிக்குகள் போன்று நாட்டில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று பேட்டியில் கூறியுள்ளார்.

டெல்லி அரசு அமைத்த இந்த மொஹல்லா கிளினிக்குகள் ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கும் சமூக சுகாதார மையங்களாகும்.  சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் அவை அமைக்கப்பட்டு உள்ளன.


Next Story