முப்படை பணியில் 10,303 பெண் அதிகாரிகள்; மத்திய அரசு தகவல்
இந்திய முப்படைகளில் 10 ஆயிரத்து 303 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் உள்ள விமான, கடல் மற்றும் ராணுவம் ஆகிய முப்படைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு பதவிகளில் பணியமர்த்தப்பட்டு சிறப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் மத்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி அஜய் பட் இன்று பேசும்போது, நாட்டில் உள்ள முப்படைகளில் 10 ஆயிரத்து 303 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் மருத்துவர்கள், ராணுவ செவிலியர் சேவை அதிகாரிகளும் அடங்குவர்.
இந்திய ராணுவத்தில் 100 பெண்கள் ராணுவ வீராங்கனைகளாக பணியாற்றி வருகின்றனர். இந்திய விமான படையில் போர் விமான பெண் விமானிகளாக 15 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். பெண் அதிகாரிகள் போரை எதிர்கொள்வதற்கான அனைத்து வகையிலான பதவிகளிலும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்திய கடற்படையில் 28 பெண் அதிகாரிகளுக்கு முன்பே பணி வழங்கப்பட்டு உள்ளது. கடற்படை விமானம் மற்றும் கப்பலில் இருந்து செல்லும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் போரை எதிர்கொள்வதற்கான பணிகளில் பெண் அதிகாரிகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story