மேகதாது திட்ட பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்கும் - கர்நாடக மந்திரி கோவிந்த் கார்ஜோள்
மேகதாது திட்ட பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சட்டசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளில் நீர்ப்பாசனத்துறையில் ரூ.48 ஆயிரம் கோடி செலவிட்டனர். கிருஷ்ணா திட்டம் மிக பழமையானது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் எழுப்பினர். அந்த திட்டத்தை செயல்படுத்த எங்கள் அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு 14 கிராமங்கள் எடுக்கப்படுகின்றன. அங்கு அரசின் நில வழிகாட்டு மதிப்பு கடந்த 9 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. நிலம் கையகப்படுத்தும்போது, அங்குள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் மிக குறைவாக கிடைக்கும். ஆனால் அங்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது. அந்த விவசாயிகள் நிவாரணத்தை அதிகமாக கேட்கிறார்கள். அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இது தொடக்க நிலையில் உள்ளது. இந்த ஆண்டுக்குள் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்போம். இதுகுறித்து விவரங்களை முழுமையாக பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. கிருஷ்ணா மேலணை 3-வது கட்ட திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். இது தவிர பல்வேறு பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
Related Tags :
Next Story