137 நாட்கள் ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் - எண்ணெய் நிறுவனங்களுக்கு இத்தனை கோடி வருவாய் இழப்பா?
பெட்ரோல், டீசல் விலையை மாற்றமின்றி 137 நாட்கள் ஒரே விலையில் நீடித்தது.
புதுடெல்லி,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. குறிப்பாக, சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து 137 நாட்களுக்கு பின் கடந்த 21-ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் உள்பட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் அதன்பின்னர் 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
இந்நிலையில், 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. இது தொடர்பாக மூடிஸ் முதலீடு சேவை என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை ஒரே விலையில் வைத்திருந்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியல், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மொத்தம் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக மூடிஸ் முதலீடு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story