புதுச்சேரியில் நாளை 2022-23ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 March 2022 10:50 PM IST (Updated: 29 March 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி,  

15-வது சட்டசபையின் 2-வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ந்தேதி கூட்டப்பட்டு அதன் அனைத்து அலுவல்களும் அன்றைய தினத்திலேயே நிறைவேறியதை தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் 2-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதியாக நாளை (30-ந்தேதி) காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் பேரவை கூடத்தில் மீண்டும் கூட்டப்படுகிறது. அந்த கூட்டத்தொடரின்போது 2022-23-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக்கால பட்ஜெட்) குறித்த மசோதாவினை சட்டசபையில் நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். மேலும் 2021-22-ம் நிதியாண்டிற்காக கூடுதல் செலவினம் குறித்த மசோதா ஒன்றையும் தாக்கல் செய்கிறார். 

சட்டசபை நாளை நடைபெற உள்ளநிலையில், அதனை தயார்ப்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார். மேலும் சட்டசபை முடிந்தபிறகு தொடர்ந்து சட்டசபை நடத்தப்படுமா அல்லது ஒருநாள் மட்டும் நடத்த நடத்தப்படுமா என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.  

Next Story