ஐதராபாத்: ஊழியர் அலட்சியத்தால் வங்கி லாக்கர் அறையில் சிக்கி தவித்த முதியவர்
ஒரு வங்கி ஊழியரின் அலட்சியப்போக்கால் 85 வயது முதியவர், ஒரு இரவுப்பொழுது முழுவதையும் லாக்கர் அறையில் கழிக்க வேண்டிய பரிதாபம் நேர்ந்துள்ளது.
ஐதராபாத்,
ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி (வயது 85). இவர் அதே பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையின் லாக்கர் அறைக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.
அப்போது நேரம் மாலை 4.20 மணி. அவர் லாக்கர் அறையில் இருந்ததை கவனிக்காத ஊழியர், அதைப்பூட்டி விட்டு, வங்கி ஷட்டரையும் கீழே இறக்கி விட்டார். இதனால் அந்தப் பெரியவர் வங்கி லாக்கர் அறைக்குள் இரவு முழுவதும் சிக்கித்தவிக்க வேண்டியதாயிற்று.
வங்கிக்கு சென்ற கிருஷ்ணாரெட்டி வீடு திரும்பாததைக் கண்ட அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அப்போது வங்கியின் ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை நேற்று ஆய்வு செய்த போலீசார், கிருஷ்ணாரெட்டி லாக்கர் அறைக்குள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து லாக்கர் அறையைத் திறந்து அவர் மீட்கப்பட்டார்.
இவர் நீரிழிவு நோயாளி என்பதால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். திறந்து கிடந்த லாக்கர் அறையை மூடுவதற்கு முன்னர் அங்கு யாரேனும் இருக்கிறார்களா என்று கூட சோதிக்காத ஊழியரின் அலட்சியப்போக்கு கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்து விட்டது.
Related Tags :
Next Story