மராட்டியத்தில் ‘திகில்’ சம்பவம்: சிறுத்தைப்புலியுடன் போராடி கணவரை காப்பாற்றிய வீரப்பெண்
மராட்டியத்தில் வீரப்பெண் ஒருவர் சிறுத்தைப்புலியுடன் போராடி தனது கணவரின் உயிரை காப்பாற்றிய திகில் சம்பவம் நடந்துள்ளது. மராட்டியத்தில் நடந்த இந்த திகில் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
புனே,
அகமதுநகர் மாவட்டம் பர்னர் தாலுகா தரோடி கிராமத்தை சேர்ந்தவர் கோரக் தஷ்ரத் பவடே. இவரது மனைவி சஞ்சனா (வயது30). கடந்த 25-ந் தேதி நள்ளிரவு சஞ்சனா வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் தூக்கத்தில் இருந்து கண் விழித்த அவர் தனது வீட்டிற்கு வெளியே சிறுத்தைப்புலி ஒன்று நடமாடுவதை கண்டார்.
அப்போது தான் வீட்டிற்கு வெளியே அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த கணவரின் நினைவு அவருக்கு வந்தது. சிறுத்தைப்புலியால் அவருக்கு ஆபத்து நேரலாம் என உணர்ந்துகொண்ட அப்பெண், கணவரை காப்பாற்ற சிறுத்தைப்புலியை கண்டு அஞ்சாமல் கதவை திறந்து வெளியே வந்தார்.
ஆனால் அவர் செல்வதற்கு முன்பே சிறுத்தைப்புலி அவரது கணவரை நெருங்கி விட்டது. சஞ்சனா கண்முன்னே தூக்கிக்கொண்டிருந்த கணவரை பாய்ந்து கடித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சனா கணவரின் உயிரை காப்பாற்ற சற்றும் தாமதிக்காமல் சிறுத்தைப்புலியின் வாலை கெட்டியாக பிடித்து பின் நோக்கி இழுத்தார். கணவரை சிறுத்தைப்புலியின் கோரப்பிடியில் இருந்து மீட்க துணிச்சலுடன் போராடினார்.
இந்த சமயத்தில், சத்தம் கேட்டு வளர்ப்பு நாய் அங்கு வந்தது. சிறுத்தைப்புலியை அது தாக்கியது. கோரக்கின் தந்தையும் ஓடி வந்தார். அவர் கட்டையாலும் அங்கு கிடந்த கற்களாலும் சிறுத்தைப்புலியை தாக்கினார். இந்த கூட்டு முயற்சிக்கு பலன் கிடைத்தது. சிறுத்தைப்புலியின் பிடி தளர்ந்து அங்கிருந்து தப்பி ஓடியது.
இதையடுத்து தலை மற்றும் கைகளில் காயம் அடைந்த கோரக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பெண் சஞ்சனா, “இது ஒரு அதி பயங்கரமான சூழ்நிலை, ஆனால் எனது கணவரை சிறுத்தைப்புலி தாக்குவதை பார்த்ததும், எனது வலிமையையும் தைரியத்தையும் ஒன்று திரட்டி போராடினேன். அதன் வாலை பிடித்து இழுத்து அதன் பிடியை தளர்த்தினேன்” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story