ஆர்யன் கான் வழக்கு: போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கோர்ட்டு 60 நாட்கள் அவகாசம்
ஆர்யன் கான் வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கோர்ட்டு 60 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
மும்பை,
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கடந்த அக்டோபர் மாதம் 3-ந்தேதி அதிகாரிகள் கப்பலில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பலர் கைது செய்யப்பட்டனர். அதில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆர்யன் கான் மீது தடை செய்யப்பட்ட போதைபொருளை வைத்திருத்தல் மற்றும் நுகர்வு, போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குதல் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கை தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு விவாரித்து வருகிறது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட 180 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். இதன்படி வருகிற ஏப்ரல் மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
ஆனால் விசாரணை இன்னும் நிறைவடையாததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கூடுதலாக 90 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று செசன்சு கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மேலும் 60 நாட்கள் காலஅவகாசம் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story