இயற்கை எரிவாயு விலை இருமடங்கு உயர்வு: உரம், மின்சாரம் உற்பத்தி செலவு அதிகரிக்கும் அபாயம்
இயற்கை எரிவாயு விலை இருமடங்கு உயர்வால், உரம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மின்சாரம், உரம், சி.என்.ஜி. வாயு, குழாய்வழியாக வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் உற்பத்திக்கு இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இயற்கை எரிவாயு விலையை 6 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.
அந்தவகையில், ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரையிலான 6 மாதத்துக்கு பெட்ரோலிய அமைச்சகம் நேற்று விலையை கடுமையாக உயர்த்தியது. அதன்படி, மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 2.90 டாலராக இருந்த அதன் விலையை 6.10 டாலராக உயர்த்தி உள்ளது.
அதாவது, இரு மடங்குக்கு மேல் விலை உயர்கிறது. பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான பழைய எண்ணெய் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 6.13 டாலரில் இருந்து 9.92 டாலராக உயர்கிறது.
இந்த விலை உயர்வால், சி.என்.ஜி. எரிவாயு மற்றும் வீடுகளுக்கு குழாய்வழியாக வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை 15 சதவீதம்வரை உயரும் என்று தெரிகிறது. மேலும், மின்சாரம், உரம் ஆகியவற்றின் உற்பத்தி செலவு உயரும். இருப்பினும், மத்திய அரசு மானியம் வழங்குவதால், உரம் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து, இயற்கை எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story