பெங்களூருவில் அமித்ஷா செல்ல இருந்த சாலையில் திடீர் தீ விபத்து
பெங்களூருவில் அமித்ஷா செல்ல இருந்த சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அவர் மாற்று பாதையில் புறப்பட்டு சென்றார்.
பெங்களூரு,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்திருந்தார். துமகூரு சித்தகங்கா மடத்தில் நடந்த சிவக்குமார சுவாமியின் ஜெயந்தி விழாவில் அமித்ஷா கலந்து கொண்டார். பின்னர் அவர், துமகூருவில் இருந்து பெங்களூருவுக்கு சென்றார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாலை மார்க்கமாக அமித்ஷா செல்ல இருந்தார். இதையொட்டி, அவர் செல்லும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வசந்த்நகரில் இருக்கும் மவுண்ட் கார்மல் கல்லூரியையொட்டி உள்ள சாலையில் திடீரென்று தீப்பிடித்தது. அங்கிருந்து கரும்புகையும் வெளியேறியது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அங்கு பிடித்த தீயை அணைத்தார்கள்.
தகவல் அறிந்ததும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த், கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சாலைக்கு அடியில் பதிக்கப்பட்டு இருந்த மின்சார கேபிள் வயர்களில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார்.
மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதே நேரத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் காரணமாக மவுண்ட் கார்மல் கல்லூரி வழியாக செல்ல இருந்த அமித்ஷா, மாற்று பாதையில் அரண்மனை மைதானத்திற்கு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
Related Tags :
Next Story