போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சாட்சி திடீர் சாவு


போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சாட்சி திடீர் சாவு
x
தினத்தந்தி 3 April 2022 2:37 AM IST (Updated: 3 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் தொடர்புடைய நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் சாட்சி திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணைக்கு மராட்டிய அரசு உத்தரவிட்டு உள்ளது.

சாட்சி

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகா் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியாக இருந்தவர் பிரபாகர் சாயில் (வயது 37). இவர் திடீரென போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு எதிராக பரபரப்பு தகவலை வெளியிட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு சாட்சியான கே.பி. கோசவி, ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசியதாக இவர் கூறியது அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் கைதான சம்பவத்தை தொடர்ந்து மத்திய விசாரணை முகமைகளை பா.ஜனதா தவறாக பயன்படுத்துவதாக மராட்டிய அரசு குற்றம்சாட்டியது.

திடீர் சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மும்பை செம்பூர் மாகுல் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த போது பிரபாகர் சாயிலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக குடும்பத்தினர் அவரை ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

பிரபாகர் சாயிலின் மரணத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் எதுவுமில்லை என அவரது வக்கீல் கூறியுள்ளார்.

விசாரணைக்கு உத்தரவு

ஆனால் பிரபாகர் சாயில் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், இது குறித்து விசாரணை நடத்தும்படி மாநில போலீஸ் டி.ஜி.பி. ரஞ்சித் சேத்துக்கு உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் உத்தரவிட்டார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த சில நாட்களாக பிரபாகர் சாயில், மாகுல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் வாடகை வீட்டிற்கு மாறியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை” என்றார்.

போதைப்பொருள் வழக்கில் மத்திய விசாரணை முகமைக்கு எதிராக சாட்சியம் அளித்தவர் திடீரென இறந்ததும், இதில் சந்தேகம் இருப்பதாக மாநில அரசு கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story