மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்- ராஜ் தாக்கரே வலியுறுத்தல்
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
ஒலிபெருக்கிகள் விவகாரம்
தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை நவநிர்மாண் சேனாவின் குடிபட்வா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மும்பை பெருநகர் பகுதியை சேர்ந்த திரளான நவநிர்மாண் சேனா கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதில் கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:-
ஏன் மசூதிகளில் இவ்வளவு அதிக சத்தத்தில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது?. இது நிறுத்தப்படவில்லை என்றால், மசூதிகளுக்கு வெளியே அனுமன் பக்தி பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலிப்பெருக்கிகளில் போடப்படும். கடவுளிடம் உரையாட ஒலிப்பெருக்கிகள் தேவையில்லை. மதம் வீட்டுக்குள் இருக்க வேண்டும். எனவே மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
சோதனை நடத்த வேண்டும்
இதேபோல பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பையில் மசூதி, மதராசாக்களில் போலீசார் சோதனை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். மசூதிகளில் என்ன நடக்கிறது என்ற தகவல்கள் போலீசாருக்கு தெரிய வேண்டும். நான் பிரார்த்தனைகளுக்கு அல்லது எந்த மதங்களுக்கும் எதிரானவன் அல்ல. நான் எனது மதத்தை நினைத்து பெருமை அடைகிறேன்.
இதேபோல சரத்பவார் சாதி ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி அரசியல் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி?
இதேபோல கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும், ராஜ் தாக்கரே தாக்கி பேசினார்.
இது குறித்து அவர் பேசுகையில், "2019 மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசார மேடையில், தேவேந்திர பட்னாவிஸ் தான் அடுத்த முதல்-மந்திரி என பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கூறினர். ஆனால் அப்போது மேடையில் இருந்த உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு பிறகு தங்களது ஆதரவில்லாமல் பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிந்த பிறகு தான், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்கிறார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் மக்களின் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டன" என்றார்.
ராஜ் தாக்கரே குடிபட்வா பொதுக்கூட்டத்தில் மாநிலத்தை ஆளுங்கட்சியை மட்டுமே விமர்சித்து பேசினார். எனவே அவர் வர இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story