எரிபொருள் விலை உயர்வு; தொடர் அமளியால் ராஜ்யசபை 2 மணி வரை ஒத்தி வைப்பு
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், சரக்கு வாகன போக்குவரத்து நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ள வாகன கட்டணங்களை அதிகரிக்க பரிசீலித்து வருகிறது. இதேபோன்று, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர கூடிய நிலை காணப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வால் பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மேலவை இன்று கூடியதும் அவை உறுப்பினர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டும் கோஷங்களை எழுப்பி அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களை அமரும்படி அவை தலைவர் கூறினார். எனினும், உறுப்பினர்கள் தொடர்ந்து அவை நடவடிக்கையை முடக்கினர். இதனால், மேலவை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்படுகிறது என்று கூறி சபாநாயகர் அவையை ஒத்தி வைத்துள்ளார்.
எனினும், அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மீண்டும் அவை நடவடிக்கையை முடக்கினர். எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் அவையை 2 மணிவரை ஒத்தி வைத்துள்ளார்.
Related Tags :
Next Story