அவரைத்தான் நாடு தேடுகிறது; சொத்துகளை ராகுல் காந்திக்கு உயில் எழுதி வைத்த மூதாட்டி
நாடு அவரைத்தான் தேடுகிறது என கூறி தனது அனைத்து சொத்துகளையும் 78 வயது மூதாட்டி ஒருவர் ராகுல் காந்திக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்டின் டேராடூன் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா முன்ஜியால் (வயது 78). அவரது சொத்துகள் டேராடூனில் உள்ளது. அதிக விலை மதிப்பும் கொண்டது. இந்நிலையில், டேராடூன் கோர்ட்டில் அவர் உயில் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். அதில், தனது சொத்துகளுக்கான உரிமை முழுவதும் ராகுல் காந்திக்கு சேரும் என தெரிவித்து உள்ளார்.
அவரது சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் மற்றும் 10 தோலாக்கள் தங்கமும் கொண்டவை. காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அறிவார்ந்த விசயங்கள் நாட்டுக்கு தேவை என புஷ்பா நம்பிக்கை கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் தொலைநோக்கு பார்வையை கண்டு நான் அதிகம் வியந்து போனேன். அவரைத்தான் நாடு தேடுகிறது என முன்ஜியால் கூறியுள்ளார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த காந்தி குடும்பத்தினரையும் அவர் புகழ்ந்து உள்ளார்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் லால்சந்த் சர்மா கூறும்போது, புஷ்பா முன்ஜியால் என்னிடம் பேசும்போது இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் தங்களுடைய உயிரை நீத்தவர்கள். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் நாட்டுக்கு சேவை செய்ய தங்களை அர்ப்பணித்து உள்ளனர் என கூறினார் என்று சர்மா கூறியுள்ளார்.
புஷ்பா எழுதிய உயிலின் ஒரு நகலை வைத்துள்ள பிரீத்தம் சிங், புஷ்பாவின் செயல்களை பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, காந்தி குடும்பம் மீது புஷ்பாவுக்கு உள்ள அன்பு இதுபோன்று செய்வதற்கு அவரை ஊக்கப்படுத்தி உள்ளது. சொத்துக்கு உரிமை கோரி மக்கள் சண்டை போட்டு கொள்ளும் காலத்தில் புஷ்பா ஜி புகழத்தக்க பணியை செய்திருக்கிறார் என சிங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story