இளைஞர்களிடம் ராணுவத்தில் சேர ஆர்வம் உண்டாக்க 350 கி.மீ. தூரம் ஓடிய இளைஞர்
இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களிடம் உருவாவதற்காக இளைஞர் ஒருவர் 350 கி.மீ. தூரம் ஓடி டெல்லியை அடைந்துள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானின் சிகார் பகுதியை சேர்ந்த வாலிபர் சுரேஷ் பிச்சார். இவர் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களிடம் உருவாக வேண்டும் என்பதற்காக ராஜஸ்தானில் இருந்து டெல்லி வரை ஓட்டம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணி முடங்கியது. இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணியை தொடங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இளைஞர் சுரேஷ் ராஜஸ்தானில் இருந்து கடந்த மார்ச் 29ந்தேதி புறப்பட்டு, 350 கி.மீ. தொலைவை ஓடி டெல்லியை இன்று அடைந்துள்ளார். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் அவரும் கலந்து கொண்டார். ஒரு மணிநேரத்திற்கு 6 கி.மீ. தொலைவை அவர் ஓடி கடந்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தினமும் காலையில் 4 மணிக்கு ஓட தொடங்குவேன். காலை 11 மணிக்கு பெட்ரோல் பம்ப் ஒன்றை அடையும் வரை நிற்காமல் ஓடுவேன். அதன்பின் ஓய்வு எடுக்கும் எனக்கு, அக்கம்பக்கத்தில் உள்ள, ராணுவத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் தரும் உணவை சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.
இளைஞர்களிடம் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உண்டாக வேண்டும் என்பதற்காக நான் ஓடினேன் என்றும் சுரேஷ் கூறியுள்ளார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தருண் என்ற இளைஞர் (வயது 21) கூறும்போது, ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக ஓராண்டுக்கும் கூடுதலாக வீட்டை விட்டு விலகி இருக்கிறேன். பசு மற்றும் எருமை ஒன்றை விற்று என்னுடைய பெற்றோர் எனது கல்வி செலவை ஏற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.
ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக உத்தரகாண்டை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா தினமும் பணி முடிந்து இரவில் 10 கி.மீ. தூரம் ஓடி சென்று வீட்டை அடையும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்து வைரலானது.
தினமும் காலை எழுந்து, பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைப்பது, பின்னர் பணி முடிந்து இரவில் நொய்டா சாலையில் ஓட்ட பயிற்சி என குடும்ப சுமையுடன் ராணுவத்தில் சேரும் தனது கனவை நனவாக்கும் முயற்சியில் விடாமல் ஈடுபட்ட அவரை பலரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story