இந்திய பொருளாதாரம் 2022ம் நிதியாண்டில் 7.5% வளர்ச்சியடையும் - ஆசிய வளர்ச்சி வங்கி


இந்திய பொருளாதாரம் 2022ம் நிதியாண்டில் 7.5% வளர்ச்சியடையும் - ஆசிய வளர்ச்சி வங்கி
x
தினத்தந்தி 6 April 2022 5:08 PM IST (Updated: 6 April 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியானது உள்கட்டமைப்பில் பொது முதலீட்டை அதிகரிப்பதால் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும்

புதுடெல்லி,

இந்தியாவின் பொருளாதாரம் 2022ம் நிதியாண்டில் 7.5% வளர்ச்சியடையும் என்றும், அடுத்த 2023ம் நிதியாண்டில் 8% வளர்ச்சியடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

2022ம் நிதியாண்டு என்பது மார்ச் மாதம் 2023ம் ஆண்டு வரையிலான காலத்தை கணக்கில் கொள்ளப்பட்டது.

ஆசிய வளர்ச்சி வங்கி இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

இந்தியாவில் வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியானது, அதன் உள்கட்டமைப்பில் பொது முதலீட்டை அதிகரிப்பதால் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும். மேலும், தனியார் முதலீடு அதிகரிப்பதன் மூலமும்   பொருளாதாரம் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு. அதனால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளப்பட்டு இந்த கணிப்பு உள்ளது. இந்த கண்ணோட்டம், கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசிகளால் ஏற்பட்ட நீடித்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்டுள்ளது. புதுவகை கொரோனா தொற்றால் அதிக பாதிப்பு ஏற்படாது என்பதை கண்ணோட்டமாக கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

"இந்தியா நிலையான பொருளாதார மீட்சிக்கான பாதையில் உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் கொள்கை, தொழில்துறை உற்பத்தியை எளிதாக்குவதற்கான ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை நாட்டின் விரைவான மீட்சிக்கு துணைபுரியும்.

அடுத்த 2 ஆண்டுகளில், நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள பெரிய பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் காரணமாக, அதிக அளவில் தனியார் முதலீட்டை இது ஊக்குவிக்கும். 

பிரதம மந்திரி கதி சக்தி முயற்சியால், இந்தியாவின் தளவாட உள்கட்டமைப்பை மேம்படுத்தவும்,  மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அதிகரிக்கப்பட்டது.

அதன்மூலம் மாநிலங்கள் முதலீட்டை விரிவடைய செய்தது. இது உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.  அரசாங்கத்தின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம், உற்பத்தித் துறைக்கு உத்வேகத்தை அளிக்கும்.



அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளுக்கு மத்தியில் பணவீக்கம் 2022ம் நிதியாண்டில் 5.8% ஆக அதிகரிக்கும்.

எண்ணெய் விலை உயர்வு காரணமாக மத்திய வங்கி, அதன் பாலிசிகளின் விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

2022-23 காலகட்டத்தில் ஏற்பட்ட நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,  தற்போதைய நிதிப்பற்றாக்குறை  2.8 சதவீதம் ஆக விரிவடையும். எண்ணெய் இறக்குமதி விலை அதிகரிப்பு இதன் காரணமாக உள்ளது. 2023-24ல் இது  1.9 சதவீதமாக குறையும். ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிப்பு இதற்கு காரணமாக இருக்கும்.

வெளிநாட்டிலிருந்து நேரடி முதலீடு மந்தமாகவே இருக்கும். சர்வதேச நிலைத்தன்மையற்ற நிலை மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி நிலைமை ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. 

தொழிலாளர்களின் சந்தை நிலைமையானது மேம்படும் போது, தனியார் நுகர்வு அதிகரிக்கும்.

நாட்டில் பருவநிலை சீராக இருக்கும்பட்சத்தில், விவசாய உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளின் வருமானம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது என்று ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் இந்தியாவுக்கான இயக்குனர் டாக்கியோ கொனிஷி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மிக மோசமான அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக உள்ளது. அது வரும் நாட்களில் 4.5 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளை கொண்ட தெற்காசியாவில் பொருளாதார மேம்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். கொரோனா தாக்குதலுக்கு பிறகு தற்போது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

Next Story