வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்ய உத்தரவு - பசவராஜ் பொம்மை


வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்ய உத்தரவு - பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 8 April 2022 11:39 AM GMT (Updated: 8 April 2022 11:39 AM GMT)

பெங்களூரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் இன்று 6 தனியார் தேசிய மற்றும் சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளகளில் நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவ-மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினர்.

இதுகுறித்து முதல்-மந்திரி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது மூலம் கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தை தீவிரமா எடுத்து கொண்டு விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் கூறியுள்ளேன். சோதனைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளேன்.

இது குறித்து பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குழந்கைதளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெடிகுண்டு மிரட்டல் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. கர்நாடகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று கருதி சிலர் இவ்வாறு செய்கிறார்கள் என அவர் கூறினார்.

மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கிருஷ்ணா இல்லத்தில் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த் நேரில் சந்தித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

Next Story