பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்ட ராகுல் காந்தி முடிவு
பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான சரத்யாதவின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக அவரது வீட்டுக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி நேரில் சென்றார்.
இந்த சந்திப்புக்கு பின் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, சரத்யாதவ் ஓர் அரசியல் குரு என கூறினார். தொடர்ந்து ராகுல் பேசும்போது, அவர் (சரத்யாதவ்) இன்று கூறியது போன்று நாட்டின் நிலைமை மிக மோசமடைந்து உள்ளது.
வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருகிறது. நாடு பிரிந்து கிடக்கிறது. இந்தியாவை நாம் ஒன்றுபடுத்த வேண்டும். நம்முடைய வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்த சகோதரத்துவத்தின் பாதையில் மீண்டும் நடை போட வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில், ஊடக அமைப்புகள், பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆகியோர் உண்மையை மறைத்து விட்டனர். அந்த உண்மை மெதுவாக நமக்கு முன் வரும். இலங்கையில் அதுவே நடந்து கொண்டிருக்கிறது. அங்கே உண்மை வெளிவந்து விட்டது. இந்தியாவிலும் அந்த உண்மை விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story