கிணத்தை காணோம் என்பது போல்...! 500 டன் இரும்பு பாலத்தை காணோம் என புகார்...!


கிணத்தை காணோம் என்பது போல்...! 500 டன் இரும்பு பாலத்தை காணோம் என புகார்...!
x
தினத்தந்தி 9 April 2022 4:00 PM IST (Updated: 9 April 2022 4:00 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் 60 அடி நீள இரும்பு பாலம் ஒன்றை கொள்ளையர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.




ரோஹ்டாஸ்,


பீகாரின் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் விக்ரம்கஞ்ச் புறநகர் பகுதியில் அமியாவர் என்ற கிராமத்தில் ஆரா கால்வாய் மீது இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.  கடந்த 1972ம் ஆண்டு இந்த பாலம் 12 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது.

69 அடி நீளம் கொண்ட இந்த பாலம் முற்றிலும் இரும்பினால் ஆனது. இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

புதிய பாலம் கட்டப்பட்டதால் இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அதனை பணமாக்க கொள்ளை கும்பல் திட்டமிட்டது. இதற்காக என்ன செய்யலாம் என அவர்கள் யோசனை செய்தனர். கியாஸ் கட்டர் மூலம் பாலத்தை அப்படியே வெட்டி எடுக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து கொள்ளையர்கள் ஜே.சி.பி. எந்திரங்கள், வேன், கியாஸ் கட்டர்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கொஞ்சம், கொஞ்சமாக பாலத்தை வெட்டி எடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத, கைவிடப்பட்ட கால்வாய் பாலத்தினை 3 நாட்களில் வேருடன் பெயர்த்து எடுத்து உள்ளனர்.  மாநில நீர்ப்பாசன துறை அதிகாரிகளாக தங்களை காட்டிக்கொண்டு இந்த திருட்டில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பணிக்காக வந்திருக்கிறோம் என கூறி கொண்டு, உள்ளூர் நிர்வாக அதிகாரிகளின் உதவியையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

இதன்பின்பு தங்களுடன் கொண்டு வந்திருந்த வாகனத்தில் எல்லாவற்றையும் தூக்கி போட்டு கொண்டு பட்டப்பகலிலேயே கிளம்பி பறந்து விட்டனர்.  இதனால், திடீரென அந்த பகுதியில் பாலம் காணாமல் போனது கண்டு அந்த பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படி 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அலேக்காக தூக்கி சென்று விட்டது பற்றி அறிந்த உள்ளூர் துறை அதிகாரிகள், நன்றாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என அறிந்து உடனடியாக, நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளையர்கள் ஒரேநாளில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், பல நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாலத்தை கியாஸ் கட்டர்கள் மூலம் வெட்டி இந்த புது வகையான திருட்டை செய்ததும் தெரிய வந்தது.


கடந்த ஆண்டு ரூ.200 கோடி மதிப்புள்ள மணல்களை சாசரம் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மாபியா கும்பல்தான் இந்த கொள்ளையினை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

50 ஆண்டுகளாக இருந்த இரும்பு பாலம் ஒன்று 3 நாளில் கொள்ளையடிக்கப்பட்டு காணாமல் போனது அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.


Next Story