பூஸ்டர் தடுப்பூசிகளின் விலை ரூ.225 ஆக குறைப்பு


பூஸ்டர் தடுப்பூசிகளின் விலை ரூ.225 ஆக குறைப்பு
x
தினத்தந்தி 9 April 2022 4:47 PM IST (Updated: 9 April 2022 4:47 PM IST)
t-max-icont-min-icon

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு பூஸ்டர் தடுப்பூசிகளின் விலை முறையே ரூ.600 மற்றும் ரூ.1,200ல் இருந்து தலா ரூ.225 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட்டு கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

எனினும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசி ஒரு டோசின் விலை ரூ.1,200 ஆகவும், கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோசின் விலை ரூ.600 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில், இரு தடுப்பூசி டோஸ்களின் விலையும், பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டு ரூ.225 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது.  இதனை சீரம் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவல்லா மற்றும் பாரத் பயோடெக்கின் துணை நிறுவனர் சுசித்ரா எல்லா தங்களது டுவிட்டரில் இன்று அறிவித்து உள்ளனர்.

கோவிஷீல்டின் விலை ரூ.600 மற்றும் வரிகளும் சேர்க்கப்படும் என (முன்பு இருந்தது போன்று) பூனாவல்லா நேற்று அறிவித்து இருந்த நிலையில், மத்திய அரசுடனான ஆலோசனைக்கு பின்னர் இந்த அதிரடி கட்டண குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

உலக நாடுகள் பலவும் 3வது டோஸ் தடுப்பூசி கட்டாயம் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சூழலில், அரசால் சரியான தருணத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என பூனாவல்லா கூறியுள்ளார்.

இதனால், நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் ரூ.225 என்ற குறைக்கப்பட்ட கட்டணத்தில் இனி பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி பொதுமக்கள் பயன்பெற கூடிய சூழல் காணப்படுகிறது.




Next Story