பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சேவை கட்டணம் ரூ.150 - தனியார் மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 April 2022 8:21 AM IST (Updated: 10 April 2022 8:21 AM IST)
t-max-icont-min-icon

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சேவை கட்டணமாக ரூ.150 வசூலிக்க தனியார் மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி, 

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷண், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் கூட்டத்தை காணொலிக்காட்சி வழியாக கூட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வெளியிடப்பட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-

தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்திக்கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் கோவின் தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்காக புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. ஆன்லைனில் அப்பாயிண்ட்மென்ட் பெற்று தடுப்பூசி போட்டாலும், மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்தினாலும் அனைத்து தடுப்பூசிகளும் கோவின்தளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு, தடுப்பூசி விலையுடன் தனியார் தடுப்பூசி மையங்கள் சேவைக்கட்டணமாக ரூ.150 வசூலித்துக்கொள்ளலாம்.

முதல் 2 டோஸ் தடுப்பூசியாக எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ (கோவிஷீல்டு அல்லது கோவேக்சின்) அதே தடுப்பூசிதான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தப்படும். 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதையும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவதையும் மாநிலங்கள் விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டன.

Next Story