ஷபாஸ் ஷெரிப் நிலையான அரசை தருவாரா? இந்திய வெளிவிவகார நிபுணர் பேட்டி
பாகிஸ்தானில் ஷபாஸ் ஷெரிப் நிலையான அரசை தருவாரா? என்பது பற்றி இந்திய வெளிவிவகார நிபுணர் பேட்டியில் கூறியுள்ளார்.
குர்காவன்,
பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே, பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.
பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்ட பின், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவராகவும் உள்ள ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக அறிவிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதிய பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஷபாஸ் ஷெரிப் முறைப்படி இன்று முன்மொழியப்பட்டு உள்ளார்.
ஷெரிப், 3 முறை முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட போவதில்லை என்று கூறியுள்ளார்.
எனினும், ஷபாஸ் தனது பதவி காலம் முழுவதும் ஆட்சியில் நீடித்திடுவாரா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில், அந்நாட்டில் எந்த ஒரு பாகிஸ்தானிய பிரதமரும் இதுவரை ஐந்தாண்டு பதவி காலம் முழுவதும் பதவியில் நீடிக்கவில்லை.
இந்நிலையில், இதுபற்றி இந்திய வெளிவிவகார நிபுணர் சுஷாந்த் சரீன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஷபாஷ் ஒரு சில மாதங்களே நிலையான அரசை வழங்க முடியும். இந்த கூட்டணி உருவாக பல காரணங்கள் உள்ளன. இவற்றில், இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது, தேர்தல் சீர்திருத்தம் மற்றும் கானின் பதவி காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது ஆகியவையே முக்கிய விசயங்களாக உள்ளன.
அடுத்த ஆகஸ்டு வரை நாடாளுமன்ற பதவி காலம் உள்ள நிலையில், 12 கட்சிகள் ஒரே கூட்டணியாக செயல்பட முடியும் என நான் நினைக்கவில்லை. அந்நாட்டின் பொருளாதார சிக்கல்கள், நிதி நெருக்கடி ஆகியவற்றால், ஷபாஸ் பிரதமர் பதவியை ஒரு சில மாதங்களில் காபந்து அரசிடம் கொடுத்து விட்டு தேர்தலை சந்திக்க போய்விடுவார் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story