ரோப் கார்கள் விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்..!


ரோப் கார்கள் விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்..!
x
தினத்தந்தி 12 April 2022 3:08 AM IST (Updated: 12 April 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகுட் மலையில் ரோப் கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் இறந்தனர். 2 நாளாக அந்தரத்தில் தொங்கியவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ராஞ்சி,

சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோவில். இது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ளது. திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரோப் கார்கள் மூலம் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட 48-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் திரிகுட் மலையில், இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மீட்பு பணி நடந்தது.

இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் இறந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். ரோப் கார்கள் மோதலை தொடர்ந்து அதில் இருந்து குதிக்க முயன்ற ஒரு தம்பதியினர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றும் மீட்பு பணி தொடர்ந்து. இதுவரை 36 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீஸ் என பல்வேறு தரப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 15 பேர் ரோப்காரில் சிக்கியிருப்பதாகவும், தொடர்ந்து மீட்புப்பணி நாளை (இன்று) தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2 நாளாக அந்தரத்தில் தொங்கியவர்களை மீட்கும் பணிகளில் 2 எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் மேற்குவங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்டை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்து ஏற்படுவது இதுவே முதல் முறை ஆகும்” என்றனர்.

இதற்கிடையே விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஹபிசூல் ஹாசன் தெரிவித்தார்.

Next Story