கர்நாடகா ஒப்பந்ததாரர் மர்மச்சாவு - மந்திரி ஈஸ்வரப்பா தான் காரணம் என எழுதிய கடிதம் சிக்கியது
மந்திரி கே.எஸ். ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு கூறிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடுப்பி,
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா வளர்ச்சி பணிகள் செய்யும் விவகாரத்தில் 40 சதவீதம் கமிஷன் கேட்கிறார் என்று பரபரப்பு பேட்டி அளித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் சந்தோஷ் வாட்ஸ்-அப்பில் ஒரு தகவலை வெளியிட்டார். அதில் மந்திரி ஈசுவரப்பாவின் தொல்லையால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தனது நண்பர்கள் இருவருடன் தங்கி இருந்தார். இன்று காலை சந்தோஷ் விடுதியின் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், சந்தோஷ் தான் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் எனது சாவுக்கு மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா தான் முழு காரணம் என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மந்திரி ஈசுவரப்பா மீது கமிஷன் புகார் கூறிய சந்தோஷ் திடீரென மர்மமான முறையில் இறந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story