ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து: ஹெலிகாப்டர் உதவியுடன் நடைபெற்ற 44 மணி நேர மீட்பு பணி நிறைவு!
ரோப்காரில் சிக்கியிருந்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவுற்றது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ரோப் கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்க, கடந்த 44 மணி நேரமாக நடைபெற்ற தீவிர மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ரோப்காரில் சிக்கியிருந்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவுற்றது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு அருகில் உள்ள திரிகுட் மலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவத்தன்று மீட்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தன்று சில சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 48 பேர் மேலே ரோப் கார்களில் சிக்கியுள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம் மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீஸ், மேலும், அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கடும் செங்குத்தான மலை பகுதியில் ரோப்கார் இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று மீட்புப் பணியில் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதிய சூரிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நேற்று மாலை, தற்காலிகமாக மீட்பு பணி நிறுத்தப்பட்டது.பின் இன்று காலை மீட்பு பணி தொடங்கியது.
இதற்கிடையே, நேற்று மாலை, ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு கீழே பத்திரமாக கொண்டுவரும் பயணத்தின் போது, ஹெலிகாப்டரில் பாதுகாப்பு பெல்ட் உடைந்ததால் 1500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ஒரு நபர் இறந்தார். இன்றும் ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்து இன்னொரு நபர் பலியானார். இதனால் மொத்தம் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து கேபிள் காரில் இருந்து குதிக்க முயன்ற ஒரு தம்பதியினர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தியோகர் ரோப்கார் விபத்து சம்பவத்தை ஜார்க்கண்ட் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விபத்து குறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. விசாரணைக்கு முன்பாக கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் மூலம் விரிவான விசாரணை அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story