300 யூனிட் இலவச மின்சாரம்; ஆலோசனை செய்ய டெல்லி பறந்த பஞ்சாப் முதல்-மந்திரி


300 யூனிட் இலவச மின்சாரம்; ஆலோசனை செய்ய டெல்லி பறந்த பஞ்சாப் முதல்-மந்திரி
x
தினத்தந்தி 12 April 2022 5:02 PM IST (Updated: 12 April 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது பற்றி ஆலோசனை செய்வதற்காக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் டெல்லி சென்றுள்ளார்.



புதுடெல்லி,



பஞ்சாப்பில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.  அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16ந்தேதி முறைப்படி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார்.

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் கடந்த ஆண்டு ஜூனில் பஞ்சாப்புக்கு வந்தபோது, ஆட்சி அமைத்தால் இலவச மின்சார வினியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.

இந்நிலையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிக்கு வந்து ஒருமாதம் நெருங்க உள்ளது.  இதனை முன்னிட்டு, பஞ்சாப்பில் உள்ள உயரதிகாரிகளிடம் திட்ட நிறைவேற்றம் பற்றி கெஜ்ரிவால் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.  அதில், பஞ்சாப் மாநில மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்பு கொண்டு பேசியது முதல், மின் கட்டண தொகையை ஏற்பது வரை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு விட கூடாது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  இத்திட்டம், வாக்குறுதி அளித்ததன்படி விரைவில் நடைமுறைக்கு வருவதில் கெஜ்ரிவால் உறுதியாக உள்ளார்.

இதனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதுபற்றி ஆலோசிக்க பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார்.  இதற்காக அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பஞ்சாப்பில் கடந்த 2016ம் ஆண்டு முதல், காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கான இலவச மின்வினியோகம் இருந்து வருகிறது.  இத்திட்டத்தின்படி, எஸ்.சி., பி.சி. பிரிவினர் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருகின்றனர்.

ஆம் ஆத்மியின் இலவச மின் வினியோக திட்ட உறுதிமொழியின்படி, பொருளாதார வேற்றுமையின்றி, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

இதனால், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருவோர் அனைவரும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவார்கள்.  300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மேற்குறிப்பிட்ட வகையினர், கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

இதுவரை மின்சார பலன்கள் பெறாத மற்றவர்கள் அனைவரும் மாதத்திற்கு 300 யூனிட்டுகளை இனி பெற்று கொள்ள முடியும்.  ஆனால், மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்டுகளுக்கு கூடுதலாக மின்நுகர்வு ஏற்பட்டால், அவர்கள் மொத்த மின்உபயோகத்திற்கான கட்டணமும் செலுத்த வேண்டும்.


Next Story