பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிகழ்ச்சியில் வெடிவிபத்து காயமின்றி உயிர் தப்பினார்; ஒருவர் கைது


பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிகழ்ச்சியில் வெடிவிபத்து காயமின்றி உயிர் தப்பினார்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 13 April 2022 2:15 AM IST (Updated: 13 April 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிவிபத்து ஏற்பட்டது. அவர் காயமின்றி உயிர் தப்பினார். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பாட்னா, 

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ‘ஜன் சம்வத்’ என்ற பெயரில், பொதுமக்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அந்த நிகழ்ச்சிக்காக, நேற்று அவர் தனது சொந்த மாவட்டமான நாளந்தாவுக்கு சென்றார். அங்கு சிலாவ் பகுதியில் உள்ள காந்தி உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நிதிஷ்குமார், பொதுமக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த இடத்துக்கு சில மீட்டர் தூரத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பரபரப்பு உருவானது. எல்லோரும் அங்கும், இங்கும் ஓடினர். நிதிஷ்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.

முதலில், பட்டாசு வெடித்ததாக போலீசார் கருதினர். இருப்பினும், அது என்ன மாதிரியான வெடிபொருள் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த வெடிபொருளை எடுத்து வந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் சுபம் குமார். அவரை சிலாவ் போலீ்ஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒருவர் நிதிஷ்குமாரை நெருங்கி வந்து அவரது காலை தொட்டு வணங்க முயன்றபோது வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. வெடிவிபத்துக்கு பிறகும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.

கடந்த மாதம், தலைநகர் பாட்னா அருகே பக்தியார்பூருக்கு நிதிஷ்குமார் சென்றார். அப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர், நிதிஷ்குமார் கன்னத்தில் அறைந்தார். அதைத்தொடர்ந்து, நேற்றைய வெடிவிபத்து நடந்துள்ளது.

Next Story