10ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கை; மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
வடக்கு கிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவிற்கு மாணவர்கள் அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவிற்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் புதுடெல்லியில் ஏப்ரல் 7-ம் தேதியன்று, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, “அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அங்குள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை, இந்தி மொழியை கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளதாக” கூறினார்.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று வடக்கு கிழக்கு மாணவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
8 மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பான வடக்கு கிழக்கு மாணவர்கள் அமைப்பு(நேசோ), தங்களது கடும் எதிர்ப்பை உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அந்த அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா மற்றும் பொதுச் செயலாளர் சினம் பிரகாஷ் சிங் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேசோ அமைப்பு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது;-
"இந்த சாதகமற்ற பொருந்தா கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த நடவடிக்கையானது பூர்வீக மொழிகளுக்கு கேடு விளைவிப்பதோடு, ஒற்றுமையை சீர்குலைக்கும்.
10ஆம் வகுப்பு வரை சொந்த மாநிலங்களில் உள்நாட்டு மொழிகள் கட்டாயமாக்கப்பட வேண்டுமே தவிர இந்தி ஒரு விருப்பப் பாடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
இந்தியாவில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் 40-43 சதவீதம் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே சமயம் நாட்டில் ஏராளமான பிற மொழிகள் உள்ளன. அவை வளமானவை, செழிப்பானவை மற்றும் அவற்றின் சொந்த கண்ணோட்டத்தில் துடிப்பானவை ஆகும்.
அதுவே இந்தியாவிற்கு ஒரு பன்முக மற்றும் பன்மொழி தேசத்தின் பிம்பம் அளிக்கிறது.
இந்தி கட்டாயமாக்கப்படுவதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
எங்கள் அமைப்பு இந்தக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது, அதை தொடர்ந்து எதிர்க்கும்.
மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக, இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் இணைப்பது, வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான கூடுதல் திட்டங்கள் போன்ற வடகிழக்கின் பூர்வீக மொழிகளை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story