மராட்டியத்தில் பயங்கரம் உணவு கொடுக்காத மருமகள் சுட்டுக்கொலை - மாமனாருக்கு வலைவீச்சு


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 April 2022 1:46 AM IST (Updated: 16 April 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளை மாமனார் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ரபோடி ருத்து பார்க் பகுதியில் வசித்து வந்தவர் சீமா பாட்டீல் (வயது 42). இவரது மாமனார் காசிநாத் பாட்டீல் (வயது 76) ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் சீமா பாட்டீல் மாமனாருக்கு டீ கொடுத்தார். அதிக நேரமான பிறகும், உணவு கொடுக்காமல் டீ மட்டும் கொடுத்ததால் மாமனார் ஆத்திரமடைந்தார்.

இதன் காரணமாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மாமனார் துப்பாக்கியை எடுத்து மருமகளை நோக்கி சுட்டார். இதில் குண்டு மருமகளின் வயிற்றில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். உடனே மாமனார் காசிநாத் பாட்டீல் வீட்டில் இருந்து வெளியேறி தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சீமா பாட்டீலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீமா பாட்டீல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மற்றொரு மருமகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் காசிநாத் பாட்டீல் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காசிநாத் பாட்டீலை தேடி வருகின்றனர்.

Next Story