லேப்டாப் வெடித்து 23 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் படுகாயம்
ஆந்திராவில் 23 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் இருந்து வேலை செய்தபோது லேப்டாப் வெடித்து தீவிர சிகிச்சையில் உள்ளார்.
கடப்பா,
ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் பி கொடுரு மண்டல் நகரில் மேகவரிப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் வெங்கடசுப்ப ரெட்டி மற்றும் லட்சுமி நரசம்மா. இந்த தம்பதியின் மகள் சுமலதா (வயது 23).
சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில மாதங்களாக அவர் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம்போல் அவர் தனது அறையில் நேற்று பணியில் இருந்தபோது, அவர் வைத்திருந்த லேப்டாப் (மடிக்கணினி) திடீரென்று வெடித்து உள்ளது. இதில் அறையில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அறைக்குள் சென்றுள்ளனர். இதில், சுயநினைவற்ற நிலையில் சுமலதா மயங்கி கிடந்துள்ளார். அவரது படுக்கை முழுவதும் எரிந்து கிடந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் மின் இணைப்பை அணைத்து உள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர், சுமலதா சுயநினைவுக்கு வந்துள்ளார். அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்னர் கடப்பாவில் உள்ள மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதன்பின்பு, திருப்பதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. இதுபற்றி பி கொடுரு காவல் துணை ஆய்வாளர் நஸ்ரின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
அவரது குடும்பத்தினர் மின் கசிவினால் லேப்டாப் வெடித்து இருக்க கூடும் என சந்தேகிக்கின்றனர். எனினும், அதிகளவிலான வெப்பத்தினால் பேட்டரியில் சூடேறி அதனால் லேப்டாப் வெடித்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. அவர் தொடர்ச்சியாக லேப்டாப்புக்கு சார்ஜ் செய்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story