ஆயுஷ் தயாரிப்புகளின் தரத்தை உறுதிசெய்ய 'ஆயுஷ் அடையாள முத்திரை' விரைவில் அறிமுகம்! பிரதமர் மோடி
இதன் மூலம் தரமான ஆயுஷ் தயாரிப்புகளை தான் வாங்குகிறோம் என்ற நம்பிக்கையை உலக மக்களுக்கு ஏற்படுத்தும்.
காந்திநகர்,
குஜராத்தில் உள்ள மகாத்மா மந்திரில், மூன்று நாள் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது, “பாரம்பரிய மருத்துவ தயாரிப்புகளை அங்கீகரிக்க இந்தியா விரைவில் ஆயுஷ் அடையாளத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆயுஷ் முத்திரை, நாட்டின் தரமான ஆயுஷ் தயாரிப்புகளுக்கு நம்பகத்தன்மையை வழங்கும். சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரிபார்க்கப்பட்ட தயாரிப்புகளுக்கு, ஆயுஷ் முத்திரை வழங்கப்படும்.
இதன் மூலம் உலக மக்களுக்கு, தரமான ஆயுஷ் தயாரிப்புகளை தான் வாங்குகிறோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
மேலும், பாரம்பரிய சிகிச்சை முறைகளை நாடி நாட்டிற்கு வருபவர்களுக்கான ஆயுஷ் விசா வகையை இந்தியா விரைவில் தொடங்கவுள்ளது” என்றார்.
ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தின் மாற்று முறைகளின் சுருக்கமாகும். இந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஆயுஷ் என்ற தனி அமைச்சகம் பா.ஜ.க அரசால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story