சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 22 April 2022 3:29 AM IST (Updated: 22 April 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது.

மேலும் இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்து சலுகைகளை வழங்கியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மார்ச் 6-ந் தேதியும், ஆனந்த் சுப்பிரமணியன் பிப்ரவரி 25-ந் தேதியும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர்கள் மீதான வழக்கு, டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் இருவருக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் சித்ரா ராமகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. முக்கியமாக, பங்குச்சந்தையின் முக்கிய முடிவுகளில் சித்ரா ராமகிருஷ்ணன் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

குறிப்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை தனது ஆலோசகராக நியமித்த சித்ரா ராமகிருஷ்ணன், பின்னர் அவரை வியூக அதிகாரியாக ஆண்டுக்கு ரூ.4.21 கோடி ஊதியத்தில் நியமித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய நியமனம், அடுத்தடுத்த பதவி உயர்வுகள் மற்றும் முக்கியமான முடிவுகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழிநடத்தி உள்ளதாகவும், அவர் இமயமலையில் வசிக்கும் ஒரு மர்மமான யோகி என்று சித்ரா ராமகிருஷ்ணன் கூறியது, அவரது மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மூலம் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story