டெல்லி வன்முறையை தவறாக சித்தரிப்பதாக செய்தி சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!
வகுப்புவாத பதற்றத்தை அதிகப்படுத்தும் டெல்லி வன்முறை காட்சிகளை ஒளிபரப்பிய சேனல்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு செய்தி சேனல்களுக்கு வழிகாட்டுதல் நோட்டீஸ் வழங்கி உள்ளது. அந்த ஆலோசனை அறிக்கையில், தொலைகாட்சி மற்றும் செயற்கைக்கோள் சேனல்கள், தகவல் ஒளிபரப்பு சட்டங்களால் வகுக்கப்பட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது, வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தையடுத்து, டெல்லி நிர்வாகம் புல்டோசர் கொண்டு கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை தகர்த்தது.
ஆனால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் மட்டுமே குறிவைத்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டன என்று புகார் எழுந்தது. அதன் பேரில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து கட்டிடங்களை இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த கலவரம் மற்றும் புல்டோசர் இடிப்பு சம்பவம் தொடர்பான செய்திகள் மற்றும் படங்கள் ஊடகங்களில் வெளியாகி பதற்றத்தை அதிகரிக்க செய்தன. இதனையடுத்து, இன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து டிவி சேனல்களுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சில சேனல்கள், சமீபத்தில் நடந்த சம்பவங்களை தவறாக வழிநடத்துகின்றன. சேனல்கள் ஒளிபரப்பும் காட்சிகள் மற்றும் செய்திகள், சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத மொழி மற்றும் கருத்துகளைப் பயன்படுத்துவதாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் தோன்றுகிறது. இது நல்ல ரசனையையும் கண்ணியத்தையும் புண்படுத்துகிறது.
டிவி சேனல்களின் ஒளிபரப்புகளில் “ஆத்திரமூட்டும் தலைப்புச் செய்திகள் மற்றும் வன்முறை வீடியோக்கள் உள்ளன” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இது சமூகங்களுக்கிடையில் வகுப்புவாதத்தை தூண்டி அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்.
வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்தும் டெல்லி வன்முறை காட்சிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சி சேனல்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது.
கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 இல் வகுத்துள்ள விதிகளின் கீழ், சேனல் அல்லது நிகழ்ச்சியின் ஒளிபரப்பை மத்திய அரசு கட்டுப்படுத்தலாம் அல்லது தடை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் டெல்லியில் வெடித்த வகுப்புவாத மோதல்கள் பற்றிய செய்திகளை அமைச்சகம் குறிப்பிட்டு தெரிவித்துள்ளது.
ஜஹாங்கிர்புரி வன்முறையைப் பற்றிய செய்திகள் சமூகத்தில் பதற்றத்தை மோசமாக்குகின்றன என்று அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனில் நிலவும் மோதல்கள் குறித்து சேனல்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. சேனல்கள், பெரும்பாலும் அவர்கள் வெளியிடும் செய்திக்கு தொடர்பில்லாத அவதூறான தலைப்புகள் மற்றும் கோஷங்களை பயன்படுத்துவதாக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
Related Tags :
Next Story