மும்பையில் நடிகர் வில் ஸ்மித்: ஆஸ்கர் விழா சர்ச்சைக்குப் பிறகு பொதுவெளியில் தோற்றம்..!
ஆஸ்கர் விருது வழங்கும் விழா சர்ச்சைக்குப் பிறகு நடிகர் வில் ஸ்மித் மும்பை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் இறுதியில் கோலாகலமாக நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தார்.
இந்த விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சமபவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் வில் ஸ்மித்திற்கு அகாடமி 10 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த முடிவை ஆஸ்கார் அமைப்பாளர்கள்- மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அகாடமி அறிவித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அங்கேயே கிறிஸ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார். அதோடு அகாடமியிலிருந்து தானாக முன் வந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று மும்பையில் உள்ள தனியார் விமான நிலையத்திற்கு வில் ஸ்மித் வந்துள்ளார். ஆஸ்கர் விழா சர்ச்சைக்குப் பிறகு பொதுவெளியில் அவர் தோன்றுவது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.
அப்போது அவர், அங்கு அவரைக் காண வந்த ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அவர் மும்பை வந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
Related Tags :
Next Story