மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருபவர்கள் தமிழர்கள் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி புகழாரம்
திருமணங்களில் உச்சரிக்கப்படும், ஒருவரும் புரிந்து கொள்ள முடியாத மந்திரங்களை போன்று கோர்ட்டு நடைமுறைகள் இருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று பேசியுள்ளார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா சென்னை ஐகோர்ட்டுக்கு முதன்முறையாக இன்று வருகை தந்துள்ளார். அவர் நீதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான வி. ராமசுப்பிரமணியன், எம்.எம். சுந்தரேஷ், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சி.ஜே. முனீஸ்வர் நாத் பண்டாரி, மாநில சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 9 மாடிகளை கொண்ட நிர்வாக கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல்லை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா நாட்டினார்.
இதுதவிர, எழும்பூரில் வணிக நீதிமன்ற கட்டிடங்கள், விழுப்புரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதித்துறை குடியிருப்புகள் ஆகியவையும் திறந்து வைக்கப்பட்டன.
இதன்பின்னர் நீதித்துறை மீதுள்ள மக்களின் பார்வை பற்றி நீதிபதி ரமணா பேசும்போது, உடனடியாக நூடுல்ஸ் தயார் செய்வது போன்று உடனடி நீதி வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் பேசியுள்ளார்.
நாம் 20-20 நடைமுறைக்கு மாறியிருக்கிறோம். 3 மணிநேர திரைப்படங்களை விட குறுகிய நேர பொழுதுபோக்கினை நாம் விரும்புகிறோம். பில்டர் காபியில் இருந்து இன்ஸ்டன்ட் காபிக்கு மாறியிருக்கிறோம். இன்ஸ்டன்ட் (உடனடியாக தயார் செய்வது) நூடுல்ஸ் காலகட்டத்தில், மக்களும் உடனடியாக நீதியை எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், உடனடி நீதிக்காக நாம் போராடினால் உண்மையான நீதி தவறி விடும் என்று மக்கள் உணரவில்லை என்று அவர் பேசியுள்ளார். நீதிபதிகள் தங்களுடைய யோசனைகளை கூர்தீட்ட வேண்டும் என்றும் அறிவை விசாலப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ரமணா கேட்டு கொண்டார்.
அவர் பேசும்போது, கோர்ட்டு நடைமுறைகளை தங்களுடைய வட்டார மொழிகளில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு மொழி தடையாக இருப்பது கவனிக்கத்தக்க ஒரு விவகாரம் ஆக உள்ளது. திருமணங்களில் உச்சரிக்கப்படும், ஒருவரும் புரிந்து கொள்ள முடியாத மந்திரங்களை போன்று, கோர்ட்டு நடைமுறைகள் மற்றும் கோர்ட்டில் வழக்காடும் மொழி இருக்க கூடாது.
வட்டார மொழியை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையானது, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியுடன் வருங்காலத்தில் தீர்வு காணப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியுள்ளார்.
மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருபவர்கள் தமிழர்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா புகழாரம் சூட்டியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் கிளை ஒன்றை தமிழகத்தில் அமைப்பது பற்றிய முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நீதிபதி ரமணா, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. பி. வில்சன் கொண்டு வந்த தனிநபர் மசோதாவை நினைவுகூர்ந்து பேசினார்.
இந்த விவகாரத்தில் அரசு எந்தவொரு முடிவையும் எடுத்திருக்கிறதா? என்று எனது கவனத்திற்கு வரவில்லை. எனினும், எந்த இடத்தில் இருந்தும் வழக்கறிஞர்கள் வழக்குகளை வாதிட வசதியாக, ஆன்லைன் விசாரணை வசதியை நாம் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீதிபதிகள் நியமனம் பற்றி பேசிய அவர், நீதிபதிகள் நியமனத்தில் சம அளவிலான வாய்ப்புகள் மற்றும் வளங்களின் அடிப்படையிலான நடைமுறைகளை கொலிஜீயம் பின்பற்றி வருகிறது. அனைத்து பிரிவினர், அனைத்து பாலினத்தவர்கள் மற்றும் நாட்டின் பூகோள பகுதியில் உள்ள அனைவரையும் பரிசீலித்து நியமனங்கள் நடைபெறுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, காலியாக உள்ள 388 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பி வைக்கும்படியும் அவர் கேட்டு கொண்டார்.
நீதித்துறை கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியது என்பது தனக்கு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய நீதிபதி, நீதித்துறை செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது மற்றும் மக்களுக்கான நீதி தேவையை பூர்த்தி செய்வதற்காக, அது எப்படி அவர்களை சென்றடைய செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திப்பதும் முக்கியம் என்று கூறியுள்ளார்.
இதற்கு சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுதல், கோர்ட்டு நடவடிக்கைகளில் மக்கள் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல், மொழி தடையை நீக்குதல், நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டு வருதல், உட்கட்டமைப்பு வளர்ச்சி, காலி பணியிடங்களை நிரப்புதல் மற்றும் நீதி துறையின் வலிமையை பெருக்குதல் ஆகியவை அவசியம் என்று அவர் பேசியுள்ளார்.
அவர் நிறைவாக, நீதித்துறையின் உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசை பெரிதும் பாராட்டி பேசினார்.
Related Tags :
Next Story