உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை விவகாரம்: பெண் எம்.பி. நவ்நீத் ரானா கணவருடன் கைது


உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை விவகாரம்: பெண் எம்.பி. நவ்நீத் ரானா கணவருடன் கைது
x
தினத்தந்தி 24 April 2022 2:20 AM IST (Updated: 24 April 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து, தமிழ் நடிகையும், எம்.பி.யுமான நவ்நீத் ரானா கணவருடன் கைது செய்யப்பட்டார்.

அமரவாதி தொகுதி சுயேச்சை எம்.பி. நவ்னீத் ரானா. நடிகையான இவர் தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் நடித்து உள்ளார்.

அனுமன் பஜனை விவகாரம்

இவரது கணவர் ரவி ரானா சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்திருந்தார். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்துத்வா கொள்கையை கைவிட்டதாக ரவி ரானா எம்.எல்.ஏ., நவ்நீத் ரானா எம்.பி. குற்றம்சாட்டினர்.

மேலும் அனுமன் ஜெயந்தியன்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரது ‘மாதோஸ்ரீ’ இல்லம் முன் அனுமன் பஜனை பாட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரது வீட்டு முன் சென்று பஜனை பாடுவோம் என்று அவர்கள் அறிவித்து இருந்தனர்.

மும்பை வருகை

மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை வருகிற 3-ந் தேதிக்குள் அரசு அகற்ற வேண்டும் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கெடு விதித்து இருந்த நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ரவி ரானா, நவ்நீத் ரானா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மும்பை வந்தனர். அவர்கள் கார் பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தனர். போலீசார் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது என அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.

சிவசேனா தொண்டர்கள் ஆவேசம்

இந்தநிலையில் நேற்று காலை கார் பகுதியில் ரவி ரானா, நவ்னீத் ரானா தங்கியிருந்த வீட்டின் முன் சிவசேனா தொண்டர்கள் ஆவேசத்துடன் திரண்டனர். அவர்கள் 2 பேருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் தொண்டர்கள் தடுப்பை மீறி வீட்டுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனினும் போலீசார் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் ரவி ரானா, நவ்னீத் ரானா 2 பேரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கூறினர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதேபோல மாதோஸ்ரீ முன்பும் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக நேற்று மும்பையில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று மும்பை வரும் நிலையில், நகரில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை நடத்தவில்லை என ரவி ரானா, நவ்னீத் ரானா அறிவித்தனர்.

அதிரடி கைது

இந்தநிலையில் மாலை நேரத்தில் போலீசார் ரவி ரானா, நவ்னீத் ரானாவை வெவ்வேறு வாகனங்களில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முன்னதாக அவர்கள் போலீஸ் நிலையம் வரமாட்டோம் என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏறி போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த சிவசேனாவினர் 2 பேருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். காலி குடிநீர் பாட்டிலும் அவர்களை நோக்கி வீசப்பட்டது. இதேபோல அவர்கள் 2 பேரும் சிவசேனா தொண்டர்களை நோக்கி ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர்.

இந்தநிலையில் ரவி ரானா, நவ்நீத் ரானா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மீது இருபிரிவினர் இடையே பகையை தூண்டியதாகவும், மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் போலீஸ் தடை உத்தரவை மீறியதாகவும் கார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் நவ்நீத் ரானா, ரவி ரானா கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


Next Story