போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது- மத்திய நிலக்கரித்துறை மந்திரி
நாட்டில் போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
நிலக்கரி பற்றாக்குறை
நமது நாட்டில் 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் 100-க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு போதுமானதாக இல்லை என்றும், இதனால் நாட்டின் மின் உற்பத்தி பாதித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.
மின் பற்றாக்குறையால் மராட்டியம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடுமையான மின்வெட்டு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர வைத்தன.
தமிழ்நாட்டில் தடையில்லா மின் வினியோகத்தை பராமரிக்க தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
‘போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளது’
இந்த நிலையில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:-
தற்போது 7.25 கோடி டன் நிலக்கரி, இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி காலரீஸ் கம்பெனி, நிலக்கரி வாஷரீஸ் என பல்வேறு ஆதாரங்கள் வழியாக கிடைக்கிறது என மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஒரு டுவிட்டர் பதிவில் அவர், நாட்டின் அனல் மின்நிலையங்களில் 2.201 கோடி டன் நிலக்கரி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறியுள்ள அவர், சாதனை உற்பத்தியுடன் தினசரி அடிப்படையில் கிடைக்கக்கூடிய நிலக்கரி நிரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி
* நிலக்கரி அமைச்சகத்தின் தற்காலிக தரவுகள்படி, 2021-22 நிதி ஆண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 77.723 கோடி டன்கள் ஆகும். 2020-21 உற்பத்தி அளவு 71.600 கோடி டன்கள் ஆகும். ஆக, உற்பத்தியில் 8.55 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
* இந்திய நிலக்கரி நிறுவன உற்பத்தி 2020-21-ம் ஆண்டில் 59.624 கோடி டன்கள் ஆகும். 2021-22-ம் ஆண்டு உற்பத்தி 62.264 கோடி டன்கள் ஆகும். இது 4.43 சதவீத உயர்வு ஆகும்.
* சிங்கரேணி காலரீஸ் கம்பெனியின் உற்பத்தி 2021-22-ம் ஆண்டில் 6.502 கோடி டன்கள் ஆகும். முந்தைய ஆண்டுடன் (5.058 கோடி டன்) ஒப்பிடுகையில் இது 28.55 சதவீதம் அதிகம்.
* பிரத்யேக பயன்பாட்டுக்கு சுரங்கங்கள் (கேப்டிவ் மைன்ஸ்) செய்யும் உற்பத்தி 2021-22-ம் ஆண்டில் 8.957 கோடி டன்கள் ஆகும். முந்தைய ஆண்டில் இது 6.918 கோடி டன்கள் ஆகும்.
மொத்த வினியோகம்
* 2021-22-ம் ஆண்டில் மொத்த நிலக்கரி வினியோகம் 81.804 கோடி டன்கள் ஆகும். முந்தைய ஆண்டு இது 69.071 கோடி டன்கள் ஆகும். இதில் 18.43 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
* 2021-22-ம் ஆண்டில் இந்திய நிலக்கரி நிறுவனம் 66.185 கோடி டன் நிலக்கரியை வினியோகித்துள்ளது. முந்தைய ஆண்டு இது 57.380 கோடி டன் நிலக்கரியாக இருந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story