ஜார்க்கண்டில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 6 சிறுவர்கள் கைது
ஜார்க்கண்டில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி பக்கத்திலுள்ள கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
அந்த திருமணத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், சிறுமிக்கும், சில சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. சிறுவர்களை அந்த சிறுமிக்கு முன்பே தெரியும் என கூறப்படுகிறது.
இதன்பின்னர், இரண்டு தோழிகளுடன் நள்ளிரவில் தனது வீட்டுக்கு சிறுமி திரும்பி கொண்டிருந்துள்ளார். அவர்களை சிறுவர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்பின், ஆளில்லாத பகுதிக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தோழிகள் இருவரும் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்று சிறுமியின் பெற்றோரிடம் நடந்த விவரங்களை தெரிவித்து உள்ளனர். அவர்கள் பதறியடித்து கொண்டு, சிறுமியை தேடி சென்றுள்ளனர். அவர்களை கண்டதும் சிறுவர்கள் அனைவரும் தப்பியோடி விட்டனர்.
நடந்த சம்பவம் பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், சமூகம் என்ன நினைக்கும் என்ற அச்சத்தில் போலீசாரிடம் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்து விட்டனர். இதன்பின்பு, கடந்த வியாழ கிழமை சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். அதனால், அவர்கள் சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story