தெலுங்கானா முதல்-மந்திரி இல்லத்தில் இரவில் தங்கிய பிரசாந்த் கிஷோரால் பரபரப்பு


தெலுங்கானா முதல்-மந்திரி இல்லத்தில் இரவில் தங்கிய பிரசாந்த் கிஷோரால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 April 2022 4:22 PM IST (Updated: 24 April 2022 4:22 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணைய கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் தெலுங்கானா முதல்-மந்திரியுடனான அவரது சந்திப்பு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.




ஐதராபாத்,



பஞ்சாப், கோவா உள்பட சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து நடந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், கட்சியை மறுசீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவாக நடத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா கடந்த ஒரு வாரத்தில் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இதன்படி, கடந்த வாரம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் முக்கியமாக, பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.  இதன்பின், டெல்லியில் பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.  பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி. வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இதனையடுத்து, கடந்த 20ந்தேதி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளை சோனியா சந்தித்துள்ளார்.  வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தீவிர ஆலோசனை நடத்தினார். 

இதில், கட்சியில் மாற்றங்கள் கொண்டு வருவது, வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அவர் சோனியாவிடம் அளித்துள்ளார்.

சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவரித்ததோடு, 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டி காட்டினார்.

தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவர தயார் என்றும் அவர் கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

அவரது பரிந்துரைகள் உண்மையில் காங்கிரசிற்கு பயன் அளிக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை சோனியா நியமித்துள்ளார்.

அந்த குழு பிரசாந்த கிஷோரின் ஆலோசனைகள் குறித்த விரிவான அறிக்கையை சோனியாவிடம் சமர்ப்பித்துள்ளது.  தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் விலகி, காங்கிரசிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியானது.

கிஷோர் முறையாக கட்சியில் இணைந்தால், காங்கிரசுக்கு பலன் கிடைக்கும் என்றும் சில மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவை (கே.சி.ஆர்.) ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் (பிரகதி பவனில்) சந்தித்து பேசினார்.  நேற்று காலை முதல் அவரது இல்லத்தில் முகாமிட்டுள்ள கிஷோர், நேற்றிரவு அங்கேயே தங்கினார்.  இதனால், இருவருக்கு இடையேயான ஆலோசனை இன்று தொடரும் என எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

அடுத்த ஆண்டு தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் வியூக நிபுணரான கிஷோர் தனக்கு உதவிடுவார் என்று சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கே.சி.ஆர். தெளிவுப்படுத்தினார்.

அவர்கள் இருவருக்கும் இடையே இதற்கு முன்பும் சந்திப்பு நடந்துள்ளது.  எரவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர ராவின் பண்ணை இல்லத்தில் இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.  இதனை தொடர்ந்து, சில கிராமங்களுக்கு சென்ற கிஷோர், மக்களின் தரமதிப்பீடு பற்றிய விவரங்களை பெற்று கொண்டார்.

தெலுங்கானாவில், காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  ஆனால், காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய இரு கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கிஷோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால், காங்கிரசுடனோ அல்லது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியுடனோ கிஷோர் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது.  இதனால் கிஷோருடனான கூட்டணியை, ராவ் முறித்து கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அல்லது, தனது ஐபேக் குழு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை கவனித்து கொள்ளும் என்றும் தான் அதில் இருந்து விலகி இருப்பேன் என்றும் கிஷோர் கூறலாம் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில், காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது பற்றி கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ அல்லது தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியோ இதனை ஏற்காது என கூறப்படுகிறது.  காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டிக்கும், கே.சி.ஆர் மற்றும் அவரது மகன் கே.டி. ராமராவுக்கும் இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.

இதனிடையே, அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல கூட்டங்களையும் ரெட்டி நடத்தியுள்ளார்.  ராகுல் காந்தியும் வருகிற மே 6ந்தேதி தெலுங்கானாவுக்கு வருகை தர திட்டமிட்டு உள்ளார்.  மிக பெரிய அளவில் அரசியல் கூட்டம் ஒன்றையும் நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த சூழலில், சந்திரசேகர ராவுடனான கிஷோரின் சந்திப்பு காங்கிரஸ் கட்சியில் முணுமுணுப்பு ஏற்படுத்தி உள்ளது.  எனினும், காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு செய்யும் தனது திட்டங்களை பற்றி நாளை நடைபெறும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளின்போது கிஷோர் முன்னெடுத்து வைக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.




Next Story