1 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!


1 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
x
தினத்தந்தி 25 April 2022 2:17 PM IST (Updated: 25 April 2022 2:17 PM IST)
t-max-icont-min-icon

நேற்று இரவு யுபிஐ சர்வர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் செயலிழந்தன.இதனால் நாடு முழுவதும் யுபிஐ அடிப்படையிலான கட்டணச் சேவை நேற்று பாதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றத்துக்காக யு.பி.ஐ. என்ற ஒருங்கிணைந்த மின்னணு பரிமாற்ற சேவை நடைமுறையில் உள்ளது. இதை பயன்படுத்தி, ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கும், வர்த்தகர்களுக்கும் பண பரிமாற்றம் செய்யலாம். 

நேபாளம், பூடான், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளிலும் இந்திய யு.பி.ஐ. சேவை அமலில் உள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடி நேற்று தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி ஒலிபரப்பின் போது, ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாகக் கூறினார்.

நாட்டின் சில்லறை பணப் பரிவர்த்தனைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் யுபிஐ மூலம் செயல்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு யுபிஐ சர்வர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் செயலிழந்தன.இதனால் நாடு முழுவதும் யுபிஐ அடிப்படையிலான கட்டணச் சேவை நேற்று பாதிக்கப்பட்டது.

அதன்படி, பேடிஎம்,கூகுள் பே,போன் பே போன்ற பயன்பாடுகளில் யுபிஐ கட்டணச் சேவை சிறுது நேரம் முடங்கியது.இதனால் அதிகமான பயனர்கள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர்.

மேலும்,இந்த பிரச்சினை குறித்து டுவிட்டரில் பயனர்கள் டுவீட் செய்தனர். குறிப்பாக,பணம் செலுத்தும் சேவையைப் பயன்படுத்தும் போது பரிவர்த்தனை தோல்வியுற்றதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து விட்டதாகவும்,யுபிஐ சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக,இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி யுபிஐ சர்வர் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story