கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு கோர காலக்கெடு நிர்ணயம்
கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்றால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நேற்று காலை நிலவரப்படி நம் நாட்டில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 654 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
கொரோனாவில் பலியானோருக்காக குடும்பத்தினர் இழப்பீடு கோருவதற்கு என்.டி.எம்.ஏ. என்று அழைக்கப்படுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு முன்பாக கொரோனாவால் பலியானோருக்கு இழப்பீடு பெற விண்ணப்பிப்பதற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
* எதிர்காலத்தில், அதாவது இனி நிகழக்கூடிய கொரோனா இறப்புகளில் இழப்பீடு பெற விண்ணப்பிப்பதற்கு, இறப்பு நாளில் இருந்து 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
* சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
* இழப்பீடு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இழப்பீட்டை வழங்குவதற்கும் பிறப்பித்த முந்தைய உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
* உரிய கால கட்டத்தில் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அது பற்றி குறை தீர்ப்பாய குழுவை அணுகலாம். அந்தக் குழுவின் மூலம் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலியாக இழப்பீடு கோரி விண்ணப்பிக்கிற அபாயத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சியாக, இழப்பீடு கோரும் விண்ணப்பங்களில் 5 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். யாரும் போலியாக விண்ணப்பித்து, அது கண்டறியப்பட்டால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 52-ன்கீழ் தண்டிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story