நாட்டின் ஜனாதிபதியாவது எனது நோக்கமல்ல; பிரதமராவதே எனது கனவு - மாயாவதி
மாயாவதியை பாஜக ஜனாதிபதி ஆக்குமா? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
புதுடெல்லி,
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதியை பாஜக ஜனாதிபதி ஆக்குமா? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், "ஜனாதிபதியாவது எனது நோக்கமல்ல; உ.பி. முதல் மந்திரியாகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு" என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி மாயாவதி , "இனி உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் இல்லை. அக்கட்சித் தலைவர் அகிலேஷ் மீது முஸ்லிம்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். இதனால், அகிலேஷ் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் சூழல்களும் வரலாம்.
எனது கனவு, இந்தியாவின் ஜனாதிபதியாக அமர்வது அல்ல. உ.பி.யின் முதல் மந்திரியாகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் அமர்ந்து மக்களுக்குப் பணி செய்வதே ஆகும்.
ஆனால், என் மீது சமாஜ்வாதி கட்சியினர் யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.
சமாஜ்வாதியின் தவறான நடவடிக்கையால் தான் உ.பி. தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலில் மதரீதியானப் பிரச்சராத்தை சமாஜ்வாதியினர் தொடங்கியதால் தான் பாஜக லாபம் பெற்றது.
மேலும் உ.பி.யின் முஸ்லிம்கள் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளின் பலம் அதிகம். ஆகையால் இந்த இரண்டு சமூகத்தினரும் இணைந்து யாரை விரும்புகின்றனரோ அவரே உ.பி.யில் முதல் மந்திரியாக முடியும்.
தற்போது நடைபெறும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம்களுக்கு தொல்லையாக மின்வெட்டுக்கள் செய்வது சரியல்ல. இப்பிரச்சனையில் உ.பி. அரசு தலையிட்டு மின்வெட்டில்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும்.''
இவ்வாறு தெரிவித்தார்.
Related Tags :
Next Story