சேகர்ரெட்டி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சேகர்ரெட்டி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2022 10:22 PM GMT (Updated: 28 April 2022 10:22 PM GMT)

சேகர்ரெட்டி மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

புதுடெல்லி,

பண மதிப்பிழப்பு காலத்தில், தொழில் அதிபர் சேகர்ரெட்டியிடம் கணக்கில் வராத பணம் சிக்கியது. இதுதொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய சேகர்ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வினீத் சரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

சேகர்ரெட்டியின் சார்பில் ஆஜரான வக்கீல் விக்ரம் சவுத்திரி, ‘இந்த விவகாரத்தில் சாட்சிகளை விசாரித்ததில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால், சி.பி.ஐ. வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளது. இதுபோல புதிய ரூபாய் நோட்டுகள் ‘எஸ்.ஆர்.எஸ். மைனிங்’ நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிவித்து, வருமான வரித்துறை வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், ‘சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை, ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே ரத்து செய்ய முடியும்’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சேகர் ரெட்டியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Next Story