நாளை தொடங்கும் 3 நாடுகள் பயணத்தில் 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி


நாளை தொடங்கும் 3 நாடுகள் பயணத்தில் 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 May 2022 12:03 AM IST (Updated: 1 May 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி நாளை (திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளும் 3 நாடுகள் பயணத்தின்போது 25 நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதில் 7 நாட்டு தலைவர்களுடன் நடத்தும் சந்திப்பும் அடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

3 நாள் சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மேற்கொள்ளும் அவரது முதலாவது இந்த வெளிநாட்டு பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில் இரு தரப்பு சந்திப்புகள், 7 நாடுகளை சேர்ந்த 8 உலக தலைவர்களுடன் பலதரப்பு சந்திப்புகள், 50 உலக வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடல், இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

25 நிகழ்வுகள்

இந்த வெளிநாட்டு பயணத்தில் சுமார் 65 மணி நேரத்தை செலவிடும் பிரதமர் மோடி, இதில் 25 நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதற்கேற்ப மிகவும் நெருக்கமாக நிகழ்வுகள் ஏற்பாடாகி இருக்கிறது.

இந்த பயணத்தின் முதல் நாடாக ஜெர்மனிக்கு பிரதமர் மோடி நாளை புறப்படுகிறார். தலைநகர் பெர்லினில் பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் இந்திய-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 6-வது ஆலோசனை கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் பிரதமராக பதவியேற்றுள்ள ஸ்கோல்சை பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

டென்மார்க் பிரதமர்

ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி டென்மார்க் செல்கிறார். அங்கும் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், ராணி 2-ம் மார்கிரெட் ஆகியோருடன் சந்திப்பு மற்றும் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.

அங்கிருந்து நாடு திரும்பும் வழியில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கும் பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் 2 இரவுகளை விமானத்திலும், ஜெர்மனி, டென்மார்க் நாடுகளில் தலா ஒரு இரவையும் கழிக்கிறார்.

இந்த தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story