ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பெண் கேபின் பணியாளர்களுடன் மட்டுமே இயங்கும்! புதிய அறிவிப்பு


ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பெண் கேபின் பணியாளர்களுடன் மட்டுமே இயங்கும்! புதிய அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2022 8:37 PM IST (Updated: 1 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடந்த ஏப்ரல் 2019ல், பெரும் நிதி நெருக்கடி காரணமாக தனது செயல்பாடுகளை நிறுத்தியது.

புதுடெல்லி,

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடந்த ஏப்ரல் 2019ல், பெரும் நிதி நெருக்கடி காரணமாக தனது செயல்பாடுகளை நிறுத்தியது. இப்போது, 2022ம் ஆண்டில் திவால் சட்டத்தின் கீழ் புத்துயிர் பெறும் முதல் இந்திய விமான நிறுவனமாக விமான சேவையை நடப்பாண்டில் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.

ஜெட் ஏர்வேஸின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர், அந்நிறுவனத்தின் விமான சேவையின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதை அறிவிக்கும் ஒரு பதிவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முற்றிலும் பெண் கேபின் பணியாளர்களுடன் மட்டுமே விமானங்களை இயக்கும்.ஜெட் ஏர்வேஸின் ஆண் கேபின் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் முடிவு சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு விமானத்தில் பணிபுரியும் அனைவரும் கேபின் பணியாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர். இதில் விமானப் பணிப்பெண்கள், மூத்த விமானப் பணிப்பெண்கள் (பர்சர்ஸ்) மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சமையல்காரர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரும் கேபின் குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர், விமானத்தில் பயணிகளுக்கு தேவையான வசதி போன்றவற்றை கவனித்துக்கொள்வது கேபின் குழுவின்  முழு பொறுப்பு ஆகும்.

“எங்களிடம் குறைந்த எண்ணிக்கையிலான பெண் கேபின் குழுவினர், போயிங் 737 விமானத்தில் பயிற்சி பெற்று தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் பலர் கடந்த காலத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். 

விமானங்களை வெற்றிகரமாக நிரூபித்த பிறகு, எங்கள் நிறுவனம் அதன் ஏர் ஆபரேட்டர் சான்றிதழை மீண்டும் பெறும். தற்போதைய தொடக்க கட்டத்தில் எங்கள் கேபின் குழுவில் பெண்கள் மட்டுமே உள்ளனர்.

பாலின சம வாய்ப்பு வேலை வழங்குபவராக, நாங்கள் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு அளவை அடைந்தவுடன், கேபின் பணியாளர்களாக ஆண்களை நியமிப்போம்.”

இவ்வாறு அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் ஆண் கேபின் குழு உறுப்பினர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. மேலும், ஸ்பைஸ்ஜெட், கோ-பர்ஸ்ட் மற்றும் ஏர்-ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களில் ஆண் கேபின் குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. 

இப்போது மீண்டும் விமான சேவையை துவங்கவுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் ஆண்களை பணியமர்த்த உள்ளது. செப்டம்பர் காலாண்டில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story