2020ல் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருந்தது; அரசு அறிக்கை
நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார, பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலிலும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் பரவியது. இதனால், மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. கொரோனாவால் மக்களுக்கு சுகாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. இதன் எதிரொலியாக, அரசுக்கு பலதரப்பில் இருந்தும் நெருக்கடி ஏற்பட்டது.
எனினும், 2020ம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருந்தது என 2020-2021ம் ஆண்டுக்கான மத்திய உள்விவகார துறை அமைச்சகத்துக்கான அறிக்கை தெரிவித்து உள்ளது.
நாட்டில், டிசம்பர் 2020ம் ஆண்டு இறுதி வரை 42 அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகவும், 31 பேரை பயங்கரவாதிகளாகவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது. பயங்கரவாத ஒழிப்புக்காக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான கூட்டு பணிக்குழு கூட்டங்களில் மத்திய அமைச்சகம் ஈடுபாட்டுடன் பங்கேற்றது.
உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, அதனை மேம்படுத்தும் விதத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவல், இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சலைட்டு அல்லது மாவோயிஸ்டு குழுக்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு எடுத்தது.
தேவைப்படும்போது அடிப்படைவாத அமைப்புகள் அல்லது குழுக்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை சட்டஅமலாக்க அமைப்புகள் வழியே கண்காணித்து வந்தது. தேசிய புலனாய்வு முகமையும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட குற்றங்களை விசாரணை செய்து வந்தது. இதன் அடிப்படையில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story