தொழிலதிபர் மன்சுக்ஹிரன் கொலையில் 'என்கவுண்டர் சிறப்பு அதிகாரி' பிரதீப் சர்மாவுக்கு முக்கிய பங்கு; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
தொழிலதிபர் மன்சுக் ஹிரன், கொலையில் முன்னாள் போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா தான் முக்கிய சதிகாரராக செயல்பட்டார்
மும்பை,
தொழிலதிபர் மன்சுக் ஹிரன், கொலையில் முன்னாள் போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா தான் முக்கிய சதிகாரராக செயல்பட்டார் என்று மும்பை ஐகோர்ட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) இன்று கூறியது.
கடந்த ஆண்டு, தெற்கு மும்பை பகுதியில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு(ஆண்டிலியா) அருகே, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ல் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கார், மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் மன்சுக் ஹிரன் என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் தனது காரை காணவில்லை என பிப்ரவரி 18ல் போலீசில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் வழக்கில் திடீர் திருப்பமாக, கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி, தானே பகுதியில் மன்சுக் ஹிரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மன்சுக் ஹிரன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வஸேவை, விசாரணை முடிவடையும் வரை, மும்பை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக நடத்தப்பட்ட செயல் இது என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், மன்சுக் ஹிரன் கொலை வழக்கில் முன்னாள் 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' பிரதீப் சர்மா ஜூன் 17, 2021 அன்று என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில், பிரதீப் சர்மா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று மும்பை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்று வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ தரப்பில் கூறப்பட்டது. சர்மா ஒரு செல்வாக்கு மிக்க போலீஸ்காரர் மற்றும் பிரபலமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டவர். ஆகவே, ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் சாட்சியங்களை சிதைத்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வெளிவந்த உண்மைகளை குறித்து என்.ஐ.ஏ தரப்பில் கூறப்பட்டதாவது:-
“தொழிலதிபர் மன்சுக் ஹிரன், ரகசியத்தை வெளியிடுவர் என்ற பயத்திலும், ஆண்டிலியாவுக்கு(முகேஷ் அம்பானி வீடு) வெளியே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை நிறுத்தியது நான் தான், என்பதை அவர் ஏற்க மறுத்ததால் ஹிரன் கொல்லப்பட்டார்.
தொழிலதிபர் மன்சுக் ஹிரன் குற்றத்தை ஏற்க மறுத்துவிட்டார். ஹிரானைக் கொல்ல ஷர்மா மற்றும் மற்ற குற்றவாளிகளுடன் சச்சின் வஸே ஒரு சதித்திட்டம் தீட்டினார். ஆண்டிலியாவுக்கு வெளியே வாகனத்தை நிறுத்தியது சச்சின் வஸே என்பதை அவர்(ஹிரன்) வெளியிடக்கூடாது என்பதற்காக சச்சின் வஸே ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹிரனைக் கொன்று அதனை தற்கொலையாகக் சித்தரிக்க முயன்றனர்.
மேலும், கொலைக்குப் பிறகு, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மும்பையில் இருந்து நேபாளத்திற்கு தப்பிச் செல்லும்படி சக குற்றவாளிகளை பிரதீப் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிட வளாகத்தில் நடைபெற்ற சதித்திட்டத்திற்கான பல்வேறு கூட்டங்களில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஷர்மா கலந்து கொண்டார். போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிட வளாகத்தில், சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று என்று வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ தரப்பில் கூறப்பட்டது.
தொழிலதிபர் மன்சுக் ஹிரனைக் கொலை செய்ய கூலிப்படைக்காக போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ், ஷர்மாவிடம் ரூ.45 லட்சம் கொடுத்தார். சர்மா நிரபராதி அல்ல, அவர் குற்றவியல் சதி, கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து,நீதிபதிகள் ஏ.எஸ்.சந்தூர்கர் மற்றும் ஜி.ஏ.சனப் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Related Tags :
Next Story