சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கையால் நாடு பெரும் இழப்பை சந்தித்தது மத்திய மந்திரி நிதின் கட்காரி


சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கையால் நாடு பெரும் இழப்பை சந்தித்தது மத்திய மந்திரி நிதின் கட்காரி
x
தினத்தந்தி 7 May 2022 5:49 AM IST (Updated: 7 May 2022 5:49 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கை, தொலைநோக்கு பார்வையின்மையால் நாடு பெரும் இழப்பை சந்தித்தது என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

புனே, 

புனேயில் நேற்று ஜெயின் சர்வதேச வர்த்தக சங்கத்தின் “ஜிடோ கனெக்ட் 2022” தொழில் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியா ஏழை மக்கள்தொகை கொண்ட பணக்கார தேசம். 1947-ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கைகள், ஊழல் நிறைந்த நிர்வாகம் மற்றும் தொலைநோக்கு பார்வையற்ற தலைமை ஆகியவற்றால், நாடு பெரும் இழப்பை சந்தித்தது.

ஆனால் இப்போது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாம் சுயசார்பு இந்தியா பற்றி பேசுகிறோம். வளமான மற்றும் சக்திவாய்ந்த இந்தியாவை பற்றி பேசுகிறோம்.

மகாத்மா காந்தி அளித்த சுதேசி சிந்தனையை பிரதமர் மோடி ஊக்குவித்தார். இந்தியனாக இரு.. இந்தியாவிடமே வாங்கு... என்ற எண்ணம் பரப்பப்பட வேண்டும்.

வணிகம் பற்றி நான் உங்களுக்கு என்ன புதிதாக சொல்லிவிட முடியும்? நீங்கள் அதில் அதிக நிபுணத்துவம் கொண்டவர்கள். நாம் நாட்டில் இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் எவற்றை ஏற்றுமதி செய்கிறோம், எவற்றை இறக்குமதி செய்கிறோம் என்ற அடிப்படையில் ஒரு கொள்கையை அரசு வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story