இந்தியாவின் 28 மாநிலங்களை ரூ.12 ஆயிரம் செலவில் சுற்றி பார்த்த நபர்
ரூ.12 ஆயிரம் செலவில் 9 மாதங்களில் இந்தியாவின் 28 மாநிலங்களை பெங்களூருவை சேர்ந்த நபர் சுற்றி வந்துள்ளார்.
பெங்களூரு,
கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு ஆகியவற்றால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர். ஆனால், பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் நாட்டை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார்.
கேரளாவின் கண்ணூரை சேர்ந்த விசால் விஸ்வநாத் (வயது 32) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு நகரத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால், அவர் நடத்தி வந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் இழப்பு ஏற்படுத்தியது. ஆனால், சோதனையை சாதனையாக்க அவர் முடிவு செய்து, நாடு முழுவதும் சுற்றி பார்ப்பதற்கான வேலைகளில் இறங்கினார்.
கடந்த 9 மாதங்களில் (278 நாட்கள்) 28 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதுவும் ரூ.12 ஆயிரம் என்ற பட்ஜெட் செலவில்.
கடந்த ஆண்டு ஜூலை 26ந்தேதி இவரது சுற்றுப்பயணம் தொடங்கியது. பெங்களூருவில் ரெயில் ஏறிய விசால், அசாமின் கவுகாத்தி நகருக்கு சென்றுள்ளார். அதன்பின் அருணாசல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். கடந்த ஜூலையில் கொரோனா உச்சமடைந்து இருந்த சூழலில், அவரை மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
போனால் போகட்டும் என பயண திட்டத்தில் மாற்றம் செய்து ஜூலை 28ந்தேதி கொல்கத்தா சென்று சேர்ந்துள்ளார். பின்னர் கொல்கத்தாவில் இருந்து அவர் தொடங்கிய பயணம் ஜார்க்கண்டின் தன்பாத் மற்றும் பீகாரின் புத்தகயா வரை சென்றது. பின்னர் ஆகஸ்டில் நடந்தே உத்தர பிரதேசத்திற்கு சென்றார். தலைநகர் லக்னோ, வாரணாசி மற்றும் ஆக்ராவை சுற்றி பார்த்துள்ளார். பின்பு புதுடெல்லி சென்றார். டெல்லியில் கொரோனா தடுப்பூசியும் போட்டு கொண்டார்.
இதன்பின் விசால் நைனிடால் சென்று, ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் சென்று சிம்லாவுக்கும் சென்று சேர்ந்துள்ளார். பல கிராமங்களில் மக்கள் என்னை வரவேற்று உணவும், இருப்பிடமும் வழங்கினர் என அவர் பெருமிதமுடன் கூறுகிறார்.
லடாக் சென்று, காஷ்மீரும் சென்றுள்ளார். அக்டோபர் மத்தியில் மைனஸ் 10 டிகிரி செல்சியசில், கார்கிலில் இருந்துள்ளார். கடலுக்கு மேலே 3,300 மீட்டர் உயரத்தில் அமைந்த கார்கில் உலகின் 2வது குளிர் நிறைந்த வாழ்விடம் ஆகும்.
இதனை தொடர்ந்து அவரது பயணம் மேற்கு நோக்கி இருந்துள்ளது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்கு சென்றுள்ளார். அதன்பின்னர் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ஒடிசாவை அடைந்துள்ளார்.
இந்த நேரத்தில், வடகிழக்கு மாநிலங்கள் பயணத்திற்கு திறந்து விடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் சிக்கிம் செல்வதற்காக மீண்டும் கொல்கத்தா நகருக்கு சென்றுள்ளார். மார்ச்சில் வடகிழக்கு மாநிலங்களை சுற்றி பார்த்த அவர், மேகாலயாவில் இருந்து ரெயிலில் ஆந்திர பிரதேசம் வந்துள்ளார். தெலுங்கானாவை பார்த்து விட்டு, மராட்டியம் மற்றும் கோவாவுக்கு சென்றுள்ளார்.
இதன்பின்பு கர்நாடகாவை அடைந்து, தனது சொந்த ஊரான கேரளாவின் கண்ணூருக்கு பயணப்பட்டு உள்ளார்.
குறைந்த பட்ஜெட்டில் எப்படி பயணம் செய்ய முடிந்தது என்பது பற்றி விசால் கூறும்போது, என்னுடைய வாழ்க்கை முறையில் இது குறைந்த செலவே ஏற்படுத்தியது. யார் வேண்டுமென்றாலும் பயணம் செய்யலாம். ஆனால், எப்படி அது இருக்க வேண்டும் என்பது பற்றி நீங்களே முடிவு செய்ய வேண்டும்.
ஏன் இதுபோன்று பயணிக்கிறாய்? இதில் இருந்து உனக்கு என்ன கிடைக்க போகிறது? என பலர் கேட்டதுண்டு. அதற்கு பதிலாக, நான் ஒரு உயிரோட்டமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தேன் என தற்போது என்னால் கூற முடியும். இதற்கு மேல் எனக்கு எதுவும் தேவையில்லை. நான் அனுபவித்த தருணங்கள் எப்போதும் என்னுடனேயே இருக்கும் என கூறுகிறார்.
ஒவ்வொரு மாநில மக்களிடம் கலந்து உரையாட வேண்டும். அவர்களுடைய கலாசாரங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என அவர் தெரிவித்து உள்ளார். இந்த பயணம், 32 ஆண்டுகளில் கிடைத்தவற்றை விட அதிக அனுபவங்களை தந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story