ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் - உத்தரவால் சர்ச்சை
ஜிப்மர் மருத்துவமனையில் அலுவலக பயன்பாடுகளில் இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஜிப்மர் மருத்துவமனை என அழைக்கப்படுகிறது. இது புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்,
ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இவை அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்கள், பிரிவு ஊழியர்களுக்கான பொறுப்பு நபர்கள் ஆகியோர் இதற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், ஏதேனும் உதவி தேவையெனில் இந்தி பிரிவை தொடர்புகொள்ளும்படி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு சமூக வலைதளத்தில் பலரும் கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையில் முயற்சி தான் இது என்றும் இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story